ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Mar 26, 2026,01:32 PM IST

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் தழுவிய தனது சூறாவளி தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


திருவாரூரில் தொடக்கம்: 


தமிழக அரசியலின் முக்கிய மையமாகவும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சொந்தத் தொகுதியுமான திருவாரூரில், ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தனது தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்குகிறார். இந்தப் பிரச்சாரப் பயணம், திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கம் முதலே திமுகவின் கோட்டையாகத் திகழும் திருவாரூரில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்குவது, ஒரு சென்டிமென்ட் வெற்றியாகவும், தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் முடிவாகவும் பார்க்கப்படுகிறது.


தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் :




ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கும் இந்தப் பிரச்சாரத்தின் கீழ், முதலமைச்சர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன் வைத்து அவர் வாக்குச் சேகரிக்க உள்ளார். குறிப்பாக, மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஏப்ரல் 21-ல் கொளத்தூரில் நிறைவு :


சுமார் 20 நாட்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று வாக்குச் சேகரிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பரப்புரைப் பயணத்தை ஏப்ரல் 21-ம் தேதி நிறைவு செய்கிறார். இந்தப் பிரச்சாரப் பயணத்தின் இறுதிப் பொதுக்கூட்டம், முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முன்னிலை வகிக்கிறது. முதலமைச்சரின் இந்தப் பயணம் கூட்டணி கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு மற்றும் வாக்கு வங்கியை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.