உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி இழிவான செயல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீதான தாக்குதல் முயற்சி இழிவான செயல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் உள்ள விஷ்ணு சிலை மறுசீரமைப்பு தொடர்பான ஒரு வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான பெஞ்ச் அதை விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி "உங்கள் தெய்வத்திடமே கேளுங்கள்" என்று ஒரு கருத்தை வெளியிட்டார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் தனது காலில் இருந்த ஷூவைக் கழற்றி தலைமை நீதிபதி மீது வீச முயன்றார். ஆனால் பாதுகாவலர்கள் உடனடியாக அவரைத் தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தால் நீதிமன்ற நடவடிக்கைகள் சில நிமிடங்கள் தடைபட்டன. இருப்பினும், இந்தச் சம்பவத்தால் தான் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று தலைமை நீதிபதி கவாய் உறுதியாகத் தெரிவித்தார். வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கோர்ட் அறையிலிருந்து வெளியேற்றப்படும்போது, "சனாதன தர்மத்தின் அவமானத்தை இந்தியா பொறுத்துக்கொள்ளாது" என்று கோஷமிட்டதாக நீதிமன்றத்தில் இருந்தவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாண்புமிகு தலைமை நீதிபதி திரு. பி.ஆர். கவாய் அவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த இழிவான செயல் நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை மீதான தாக்குதல் ஆகும். இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது.
மாண்புமிகு தலைமை நீதிபதியின் அமைதி, கருணை மற்றும் பெருந்தன்மையுடன் கூடிய பதில் நீதித்துறையின் வலிமையைக் காட்டினாலும், இந்தச் சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாக்குதலுக்கான காரணம், அடக்குமுறை மற்றும் படிநிலை மனப்பான்மை நமது சமூகத்தில் இன்னும் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
நமது நிறுவனங்களை மதித்து, பாதுகாக்கும் ஒரு முதிர்ச்சியான கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.