திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jul 01, 2025,07:10 PM IST
மதுரை: திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜீத் குமார். 29 வயதான இந்த இளைஞர் மீது நகைகளைத் திருடி விட்டதாக ஒரு பெண் கொடுத்த புகாரை விசாரித்த போலீஸார் அஜீத் குமாரை கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொடூரக் கொலையை விட மிக மோசமானதாக நடந்துள்ளதாக இந்த சம்பவம் கருதப்படுகிறது. காரணம் இளைஞர் அஜீத் குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் ஒரு இடம் கூட விடாமல் கடுமையாக தாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடந்த விசாரணையின்போது நீதிபதி சுப்பிரமணியம் வேதனையுடன் தெரிவித்தார்.



இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை எஸ்.பி. காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் பெரிய கருப்பன் இன்று அஜீத் குமாரின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரை சந்தித்தார். அஜீத்குமாரின் தாயார் மாலதி மற்றும் தம்பி நவீனை சந்தித்து அவர் ஆறுதல்  தெரிவித்தார். அப்போது அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டு மாலதியிடமும், நவீனிடமும் பேச வைத்தார்.

அஜீத்குமாரின் தாயார் மற்றும் தம்பிக்கு ஆறுதல் கூறிய முதல்வர், நடக்கக் கூடாதது நடந்து விட்டது. தைரியமா இருங்க. நடவடிக்கை எடுக்கச் சொல்லிருக்கேன் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,  திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு! கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் என்று தெரிவித்திருந்தார்.