தமிழ்நாட்டின் நிதி உரிமையை வெளிப்படுத்த.. 24ம் தேதி டெல்லி செல்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இது குறித்து அதிமுக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!
இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன் என்று அவர் கூறியுள்ளார்.