கருணாநிதிக்கு நெருக்கமானவர்.. கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமாருக்கு.. முதல்வர் புகழாரம்

Su.tha Arivalagan
Nov 28, 2025,01:54 PM IST

- க.சுமதி


சென்னை: நடிகர் சிவக்குமார் கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். சிறந்த நடிகர் என்று அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டிப் பேசினார்.


சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்  கலைப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் நடிகர் சிவக்குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 


மேலும் 1846 மாணவர்களுக்கும் பட்டங்களை முதல்வர் வழங்கினார். ஓவியர் குருசாமி சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.




விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பட்டமளிப்பு விழாவிற்கு முதல்வராக மட்டுமல்ல கலைஞன் என்ற முறையில் வந்துள்ளேன். நடிகர் சிவகுமார் மற்றும் ஓவியர் சந்துருவுக்கும் மதிப்புரு பட்டங்களை வழங்குவதில் பெருமை அடைகிறேன்.


சிவக்குமார் அவர்கள் புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்ல நல்ல ஓவியர் சிறந்த சொற்பொழிவாளர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பெயர் வைத்ததால் இந்த பல்கலைக்கழகத்தை எந்த வகையிலும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்து அதற்கான நிதியை ஒதுக்குவதிலும் எந்த பாகுபாடும் இன்றி நாங்கள் வழங்கி வருகிறோம். ஆராய்ச்சி மையம் உட்பட்ட பல அமைப்புகளை உருவாக்க நிதி  வழங்கி உள்ளோம். பல்கலைக்கழகத்தின் நிர்வாக செலவிற்கான மானிய தொகையை 3 கோடியிலிருந்து 5 கோடி கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.


இன்றைய கணினி உலகத்தில் AI மூலம் பலரும் பாடல்கள் இசைகள் ஓவியங்கள் எல்லாம் உருவாக்குகின்றனர். அதனால் தமக்கு வாய்ப்புகள் குறைந்து விடும் என்று யாரும் கவலை கொள்ள வேண்டாம். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டத்தில் கிராமிய கலை பயிற்சி பள்ளி அமைக்கப்படும். அதற்கான நிலத்தை அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தை தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013இல் தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவியது. இந்த தமிழக அரசு இசைப் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பிரபல கர்நாடக இசைப் பாடகி முனைவர் சௌமியா செயல்பட்டு வருகிறார்.


(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)