அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Jul 12, 2025,05:24 PM IST

விழுப்புரம்: பாஜகவைக் கண்டு அ.தி.மு.க.வுக்கு எந்தவித பயமும் இல்லை என்றும், மாறாக அமலாக்கத்துறையினர் (Enforcement Directorate - ED) எப்போது தங்கள் கதவைத் தட்டுவார்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் நடுக்கத்தில் இருப்பதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 


விழுப்புரம் மாவட்டம் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஒரு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அ.தி.மு.க.வை மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதாக விமர்சித்ததற்குப் பதிலளிக்கும் வகையில் பேசினார்.


அவர் பேசும்போது, பா.ஜ.க.வைக் கண்டு அ.தி.மு.க. பயப்படுகிறது என்று ஸ்டாலின் சொல்வது வேடிக்கையாக உள்ளது. நாங்கள் யாரையும் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல. மக்கள் சக்திதான் எங்கள் பலம். ஆனால், முதல்வர் ஸ்டாலின்தான், அமலாக்கத்துறை எப்போது தங்கள் வீட்டின் கதவைத் தட்டும் என்று அன்றாடம் நடுக்கத்தில் இருக்கிறார். 




டி.ஆர்.பி. ராஜா, செந்தில் பாலாஜி போன்ற திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது போல, மேலும் பல திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்ற அச்சத்தில்தான் ஸ்டாலின் இருக்கிறார். அமலாக்கத்துறை விசாரிக்கும் டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் திமுக அரசுக்குத் தொடர்பு உள்ளது. இந்த வழக்குகளில் தங்கள் மீது நடவடிக்கை பாய்ந்துவிடுமோ என்ற பயத்தில்தான் ஸ்டாலின் பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக தெரிகிறது. 


கல்விக்கு எதிரானவனாக என்னை சித்தரித்துப் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்ததால்தான் கடந்த அதிமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கினோம். 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்தோம். பல கல்லூரிகள், பாலி டெக்னிக்குகளைத் திறந்தோம். ஆனால் ஸ்டாலின் என்ன செய்கிறார், கருணாநிதி பெயர் வைப்பதற்காக ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குகிறார்.  கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்விக்காக என்ன செய்தீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும் என்றார் அவர்.