அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
- கலைவாணி கோபால்
சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று அதி நவீன வால்வோ பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்கனவே, மின்சார பேருந்து , சொகுசு பேருந்துகள், தாழ்தளப் பேருந்துகள் என்று உள்ளன.
இந்த நிலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை தனியார் ஆம்னி பஸ்களுக்கு நிகராக மாற்றும் வகையில் அதற்கென்று 130 வால்வோ பேருந்துகளை கொள்முதல் செய்கிறது தமிழ்நாடு அரசு. அதில், 110 பேருந்துகள் குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள். அதில் ஸ்லீப்பர் மற்றும் செமி ஸ்லீப்பர் வசதிகள் உள்ளன.
மீதமுள்ள 20 பேருந்துகள் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்லீப்பர் அண்ட் செமி ஸ்லீப்பர் பேருந்துகள் ஆகும். இந்தப் பேருந்துகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மொத்தம் 51 சாய்வு இருக்கைகள் கொண்டவையாக இந்த 20 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு பேருந்து விலை கிட்டத்தட்ட 1.5 கோடி என்ற விதத்தில் சுமார் 34 கோடியில் 20 வால்வோ பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், நெடுந்தூர பயணத்தின் போது ஓட்டுனருக்கும் சோர்வு இல்லாத முறையில் அவருடைய இருக்கைகளும் உயர்தர சாய்வு, இருக்கை ஏர்சஸ்பென்ஷன், அட்ஜஸ்ட்மென்ட் போன்ற நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு உயர்தர வசதிகளுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு சென்னை வந்து சேர்ந்தன.
போக்குவரத்து துறையின் இந்த வால்வோ பேருந்தின் வழித்தடம் தற்சமயம் சென்னையில் இருந்து மதுரை கோயம்புத்தூர், பெங்களூரு, நெல்லை, திருச்சி, சேலம், நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படவுள்ளன.
ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு கருவியும் , பொருத்தப்பட்டுள்ளது. ஜன்னல்களுமே அவசர காலத்தில் திறக்கப்பட்டு அதன் வழியாக பணிகள் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .இந்தப் பேருந்துகளில் பயணிகளுக்கான கட்டணம் அறிவிக்கப்படவில்லை.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)