மகளிர் தினத்தை முன்னிட்டு.. பிங்க் ஆட்டோ திட்டத்தை துவங்கி வைத்தார்.. முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Manjula Devi
Mar 08, 2025,06:16 PM IST

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு, நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் மு. க ஸ்டாலின் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை துவங்கி வைக்கிறார்.


அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கும் பெண்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையிலும், பெண்களைப் போற்றும் வகையிலும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் கையில் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நேற்று காவல் உதவி qr கோடு திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.




அந்த வகையில், கடந்த சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பாக மகளிர் பிங்க் ஆட்டோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.


சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பிங்க் ஆட்டோ திட்டத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த திட்டத்தின் மூலமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.




அதே சமயத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களின் மூலம் பயன்பெறும் மகளிர்களுக்கு 3000 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கிய சிறப்பிக்க இருக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.