அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி‌.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!

Manjula Devi
Apr 28, 2025,03:20 PM IST

சென்னை: அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. ஊழல் விழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழக உரிமைகளை அடகு வைத்தவர்கள் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு பலரும் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் காவல்துறையில் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும் ரைமிங்காக பட்டியலிட்டு பேசியிருந்தார். அதில் அவர் கூறியதாவது,


பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடே சாட்சி. சாமானிய மக்களை வதைக்கக்கூடிய ஆட்சிக்கு சாத்தான்குல மக்களே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. 




தமிழ்நாட்டை பிளவுபடுத்துவதுதான் அதிமுக ஆட்சியின் சாதனை. எங்கும் எதிலும் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் என ஊழலை திணித்து அந்த ஊழல் வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் அடகு வைத்து வருவது யார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். 


எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியை விட தற்போது திமுக தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்து இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டில் தான் கொலை சம்பவம் குறைவாக நடைபெற்றுள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் கொலைகள் குறைந்து கொண்டுதான் வருகிறது. கொலைக் குற்ற விகிதம் ஒரு லட்சம் மக்களுக்கு தேசிய சராசரி 2.2 என்றால் தமிழ்நாட்டில் அது 1.1 ஆக குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் அதிகபட்சமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ரவுடிகள் 1929 பேர் என்றால், திமுக ஆட்சியில் அதிகபட்சமாக 3545 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏ மற்றும் ஏ ப்ளஸ் உடைய எண்ணிக்கை 50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய மரணங்கள் அடியோடு குறைக்கப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சி ஆட்சி காலத்தில் நடந்த சாத்தான்குல காவல் நிலைய மரணத்தை யாராலும் மறக்க முடியாது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாக குறைக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு முதல் ஒரு காவல் நிலைய மரணம் கூட நடைபெறவில்லை என்ற நிலையை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்.‌


ஆகவே, கொலை கொள்ளை நடக்கவிட்டு ரவுடிகள் நடமாட்டத்தை தாராளமாக்ககிய ஆட்சியை நடத்தினார்கள். சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடத்தக்கூடிய இந்த ஆட்சியை குறை சொல்வது இந்த ஆண்டின் உடைய சிறந்த நகைச்சுவை என நான் சொல்ல விரும்புகிறேன். ஒரு குற்ற வழக்கை சிறப்பாக நடத்துவதற்குடைய அடையாளம் அதில் எவ்வளவு விரைவாக சார்ட் சீட்டுகள் பைல் செய்வதுதான். நீதியை பெற்று தர வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதாது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்வது முக்கியம். 


எனவே, நான் குறிப்பிட விரும்புவது எந்த வழக்காக இருந்தாலும் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும் அரசாக இந்த அரசு இருக்கிறது. கொலை, ஆதாய கொலை ஆகிய வழக்குகளில் 95.2% குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளை வழக்குகளில் 98.4 விழுக்காடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, திமுக உடைய சட்டம், ஒழுங்கை பற்றி பேச அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் என கூறினார்.