ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Feb 04, 2026,03:08 PM IST

சென்னை: கௌரவத்திற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும், எனது சகோதரருமான ராகுல் காந்தி அவர்கள் எழுப்பும் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த விவகாரங்களில் தெளிவுபடுத்தவும் அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.




எட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமை மீண்டும் நிலைநாட்டப்படும் வகையில், இந்த இடைநீக்கத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானேவின் வெளியிடப்படாத நினைவுக்குறிப்பான 'Fours Stars of Destiny' புத்தகத்தில் உள்ள கருத்துகளை ராகுல் காந்தி அவையில் மேற்கோள் காட்ட முயன்று நேற்று பேசினார். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்க மறுத்தார். மேலும் பாஜக உறுப்பினர்களும் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.


இவை பாதுகாப்பு தொடர்பானவை என்பதால் இதுகுறித்து இங்கு விவாதிக்க முடியாது என்று அரசு தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின்போது மேசை மீது ஏறி காகிதங்களை கிழித்து எறிந்ததாக மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பிக்கள் நடப்புத் தொடர் முழுவதுக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.