ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Nov 08, 2025,10:49 PM IST

சென்னை : ஒரே ஒரு  சூரியன் தான்...ஒரே ஒரு சந்திரன்தான்.. அதே போல் ஒரே திமுக தான் என பாட்ஷா பட ரஜினி ஸ்டைலில் அதிரடி பேச்சை வெளிப்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு, குறிப்பாக தவெகவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 


சென்னையில் நடைபெற்ற திமுக.,வின் 75வது அறிவுத் திருவிழாவில் பேசியபோதுதான் முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். திமுக சார்பில் நடந்த இந்த விழாவில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அறிவை மையமாக கொண்டு அறிவொளி பரப்பி வரும் திமுக.,வின் 75வது ஆண்டு விழாவிற்கு உதயநிதி அறிவுத் திருவிழா என பெயர் வைத்துள்ளது மிகவும் பொறுத்தமானது. 


ஏதோ கட்சியை துவங்கினோம், அடுத்த முதல்வர் நான் தான் என அறிவித்து நாம் ஆட்சிக்கு வரவில்லை. திமுக.,வின் தலைவர் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை சுற்றி, சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார்கள்.எத்தனை போராட்டங்கள், எத்தனை சவால்கள், எத்தனை தியாகங்கள் செய்தது திமுக...


அறிவிலிகளே.. திமுக போல உழையுங்கள்




திமுக பெற்ற வெற்றி என்பது யாரும் படைக்க முடியாத வரலாற்று சாதனை. இந்த வரலாறு பற்றி தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் திமுக.,வை போலவே வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார்கள். திமுக.,வை போல் வெற்றி பெற திமுக.,வை போல் உழைப்பும் அறிவும் தேவை. 


ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுக தான். இப்படி ஒரு இயக்கம் மண்ணில் தோன்ற முடியாது. இந்தியாவே போற்றும் இயக்கமாக தான் திமுக வளர்ந்துள்ளது. இந்த சாதனையும் வளர்ச்சியும் தான் பலரது கண்களை உறுத்துகிறது.


நாம் பேசும் சமூக நீதி, சுய மரியாதை, கூட்டாட்சி மாநில சுயாட்சி ஆகியவை தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது. இவர்களை தமிழகத்திலேயே முடக்க நினைத்தால் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என கோபப்படுகிறார்கள். இந்த அறிவுத் திருவிழா, திராவிடம் வெல்லும்...அதை காலம் சொல்லும் என முழங்கக் கூடிய திருவிழா.  எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும், எத்தனைத் தந்திரங்கள் செய்தாலும் நம்மை வீழ்த்த முடியாது.


திருட்டு வழியில் வீழ்த்தப் பார்க்கிறார்கள்


கொள்கை ரீதியாக திமுக.,வை வீழ்த்த முடியாத காரணத்தால் தான் இப்போது தேர்தல் ஆணையம் மூலமாக திருட்டுத்தனமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று பார்க்கிறார்கள். அது தான் SIR. 


தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என அனைத்து கட்சிகளும் கூறிய பிறகும் ஏன் இதை நடத்துகிறார்கள்? இதை காது கொடுத்து கேட்காமல் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை துவங்கி விட்டார்கள். இதற்கு எதிராக சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து இனியும் போராடுவோம். 


களத்தில் வேலை செய்யும் திமுக தொண்டர்கள் எந்த ஒரு போலி வாக்காளரும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்காளர்கள் விடுபடாமல், யாருடைய வாக்கும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்திருக்கும் போது எந்த காவியாலும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. 2026லும் திமுக ஆட்சி அமையும். திராவிட மாடல் 2.ஓ ஆட்சி அமையும் என்றார் முதல்வர்.


தனது பேச்சின்போது, அவர் மறைமுகமாக விஜய்யின் தவெகவையும் மற்றும் பாஜகையும் தாக்கிப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.