முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

Su.tha Arivalagan
Apr 23, 2026,09:09 AM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் காலையிலேயே வாக்களித்து விட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச் சாவடியில் குடும்பத்தோடு போய் வாக்களித்தார்.

பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளில் குவிந்திருப்பதைக் காண முடிந்தது. வெயில் காரணமாக வயதானவர்கள் காலையிலேயே வாக்களிக்க வந்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வழக்கமாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு துருவங்களுக்கு இடையே நடைபெறும் இந்த அரசியல் போர், இம்முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வருகையினால் ஒரு மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. நான்காவது சக்தியாக நாம் தமிழர் கட்சியும் களத்தில் நிற்கிறது.



தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வெயில் தாக்கத்தையும் மீறி மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின், பேரன் இன்பநிதி ஆகியோரும் வந்திருந்து வாக்களித்தனர்.

தவெக தலைவர் விஜய், நீலாங்கரையில் வாக்களித்தார். அவர் உள்ளே வந்து வெளியே செல்வதற்குள் காவல்துறையினர் கூட்டத்தை சமாளிப்பதற்குள் திணறிப் போய் விட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் கோபாலபுரம் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் வந்து வாக்களித்தார்.

இதேபோல தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட விஐபிக்களும் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

இவர்கள் எல்லாரையும் விட முதல் ஆளாக ஓட்டுப் போட்ட விஐபி நம்ம அஜீத்தான். தனது வாக்குச் சாவடிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே வந்து விட்ட அஜீத் முதல் ஆளாக ஓட்டுப் போட்டு விட்டுக் கிளம்பிச் சென்றார். வெள்ளை நிற கோட் சூட்டில் பில்லா அஜீத் போல கூலருடன் கலக்கலாக வந்திருந்தார் அஜீத்.