127 வது மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார்.. முதல்வர் மு.க ஸ்டாலின்!

Manjula Devi
May 15, 2025,11:38 AM IST

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் காட்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 



ஊட்டி என்றாலே ரம்யமான காலநிலை மாற்றம், சுற்றுலா பயணிகளை ரசிக்க வைக்கும்.அதே சமயத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் பல வண்ண வண்ண மலர்களால் உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி பலரையும் கவரும் விதமாக அமைய பெற்றுள்ளது. இதனால் குளுமையான சூழ்நிலையும் அனுபவிக்கவும், மலர்க் கண்காட்சியை  காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவது வழக்கம்.




அந்த வகையில் இந்த வருடம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127ஆவது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த மலர் காட்சி இன்று தொடங்கி,மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.  ராஜராஜ சோழன் அரண்மனை போன்ற பிரம்மாண்ட முகப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே சிம்மாசனம், யானைகள், போன்ற வடிவில் மலர் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. 


இது மட்டுமல்லாமல் கண்காட்சி முழுவதும்  7 லட்சம் மலர்களைக் கொண்டு 24 மலர் சிற்பங்கள் உள்ளன. அதே போன்று கல்லணையிலிருந்து நீர் கொட்டுவது போன்ற மலர் சிற்பம், அன்னபறவை,  படகு ஊஞ்சல், உள்ளிட்ட ஏராளமான மலர் சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதுவரவாக ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் போன்ற 275 வகையான விதைகள், செடிகள், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.



இந்த நிலையில் இன்று 127வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் துவங்கி வைத்து பார்வையிட இருக்கிறார்.

மேலும் இன்று தொடங்கும் மலர்கண்காட்சிய ஒட்டி உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.