CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்

Meenakshi
Dec 27, 2025,05:14 PM IST
சென்னை: நாட்டின் முதலமைச்சருக்கு முடியவில்லை என்றாலும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னை திருவேற்காடில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில், நடிகர் நாட்டை ஆள தயாராகிவிட்டார். காசு, பணம் கொடுத்தால் தான் பெரிய கட்சி என்று சொல்பவர்கள் கூட ஓட்டுக்கு காசு, பணம் கொடுத்தால்தான் சொந்த கட்சிக்காரனே ஓட்டு போடுவான். மாநாட்டுக்கு காசு கொடுத்தால் தான் வருவான். அங்க வந்த பிறகும் சாப்பாட்டுக்கு நேரம் ஆகிட்டா அவனே சாப்பிடும் இடத்தை தேடி ஓடிவிடுவான். ஆனால் எங்களுக்கு கூடிய கூட்டம் காசு கொடுக்காமல் கூடியது.



என்னைப் போன்று தனித்து போட்டியிட்டு, கொள்கை, கோட்பாடுகளை சொல்லி ஓட்டு கேட்டு என்னை வென்று காட்டுங்கள் பார்ப்போம். அப்போது தான் அது வெற்றியாகும். இலவசத்தை எதிர்ப்பவன் நான். இலவசங்கள் கொடுத்து அடிமையாக்கி வைத்திருக்கிறீர்கள். இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் கிடையாது.. வீழ்ச்சி திட்டம்.  படிக்க கல்வி.. பார்க்க நல்ல வேலை.. வேலைக்கு ஏற்ற சம்பளம்.. குடிக்க தூய தண்ணீர். 

நீ குடிப்பது தண்ணீர் இல்லை, விஷம்.. பயணிக்க பாதை.. பார்க்க நல்ல மருத்துவம். நல்ல மருத்துவம்னா என்ன? முதல் குடிமகனுக்கு என்னவோ அதே மாதிரி சிகிச்சை கடை கோடியில் உள்ள சாதாரணவனுக்கும் கிடைக்கணும். பள்ளியில் அரசியல் பேசக்கூடாது. கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது. ஆனால், சினிமா பேசலாம். பள்ளி, கல்லூரி நிகழ்வுகளுக்கு நடிகர்கள் வருகிறார்கள். அந்த மேடைகளில் மொழி சார்ந்து, வளம் சார்ந்து, பண்பாடு சார்ந்து பாட்டு இருக்காது. திரைப்பாட்டு. அதற்கு நடனம் மட்டுமே இருக்கும்.

நாட்டின் முதல்வருக்கு உடம்பு சரியில்லை என்றால், அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்க வேண்டும் என சட்டம் போடுவேன். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எவராக இருந்தாலும், அரசு அதிகாரிகள் எல்லாரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுக்கணும். இப்படி செய்யும் போது அதுவே தரம் உயர்ந்திடும். அரசு பள்ளி, கல்லூரிகள் இதே மாதிரி அரசு பள்ளி ஆசிரியர்கள் மகன்கள், அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மகன், மகள்கள் எல்லாரும் அரசு பள்ளி, அரசு கல்லூரியில் தான் படிக்க வேண்டும். அப்படி அரசு பள்ளி, கல்லூரியில் படித்தால் தமிழ்நாடு அரசு வேலையிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வறுமை, ஏழ்மை நிலை இல்லாத வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன் என்று தெரிவித்துள்ளார்.