புதுச்சேரி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை...முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் குடும்பத் தலைவிகளுக்கான மாதந்திர உதவித் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க உள்ளதாக முதல்வர் என்.ரங்கசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டம் வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தவும், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும் இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ற கோரிக்கையை ஏற்று, தற்போது இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, பழைய உதவித்தொகையான ரூ.1,000 உடன் கூடுதலாக ரூ.1,500 உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவியும் மாதம் ரூ.2,500 ஐ தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவார்கள்.இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்களிடையே, குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் முதல்வர் ரங்கசாமியால் சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இதில் 4 கிலோ பச்சரிசி உள்ளிட்ட ரூ.800 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே ரங்கசாமி அரசு இந்த அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.