சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
சென்னை: சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸின் பிரம்மாண்ட வெண்கலச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தபடி, உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணரான கார்ல் மார்க்ஸின் (Karl Marx) முழு உருவச் சிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் திறந்து வைத்துள்ளார். கார்ல் மார்க்ஸ் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை நூலகங்களிலேயே செலவிட்டவர் என்பதால், சர்வதேச அளவில் புகழ்பெற்ற கன்னிமாரா நூலக வளாகம் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் மற்றும் அரசு அருங்காட்சியக வளாகம் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்புடன், கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் பார்வையிட்டார். மேலும், அவரது பங்களிப்புகள் குறித்த குறும்படமும் அங்கு திரையிடப்பட்டது.
விழாவில் பேசிய முதல்வர், "திராவிட மாடல் அரசும், மார்க்சியச் சிந்தனைகளும் 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற ஒற்றை இலக்கை நோக்கியே பயணிக்கின்றன" என்று குறிப்பிட்டார். 1931-லேயே தந்தை பெரியார் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை' தமிழில் மொழிபெயர்த்ததை அவர் நினைவு கூர்ந்தார். இந்த விழாவில் திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, செல்வப்பெருந்தகை , மற்றும் இடதுசாரி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.