ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம், வழக்குகள் வாபஸ்...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகள்

Su.tha Arivalagan
Sep 02, 2026,12:58 PM IST

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 2, 2026) விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல முக்கிய மற்றும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். பொதுமக்கள் பயன்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.


110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கள் :


1. உடனுக்குடன் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் (DL) :

போக்குவரத்துத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், "பாஸ் செய்த அன்றே லைசென்ஸ்" திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வாகனம் வாங்குவோர் மற்றும் பொதுமக்கள் தங்களது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழை (RC) இணைய வழியிலேயே தாங்களே பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

இந்த ஆன்லைன் பதிவிறக்க வசதியானது வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று முதல்வர் அறிவித்தார்.


2. விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் :




முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் (2021 முதல் 2026 வரை) போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற அரசு முடிவெடுத்துள்ளது. திருவண்ணாமலை சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் இதில் அடங்கும். மனிதநேய அடிப்படையிலும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் இந்த வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாகவும், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.


3. ரூ.175 கோடியில் 250 புதிய பூங்காக்கள் :

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் மாநிலம் முழுவதும் ரூ.175 கோடி மதிப்பீட்டில் 250 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் ரூ.130 கோடியில் பிரம்மாண்டமான பெரிய பூங்காக்கள் உருவாக்கப்படும். பசுமைத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


4. சென்னை மற்றும் மதுரையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் :

நகர்ப்புற உள்கட்டமைப்பைச் சீரமைக்க பெரும்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது:

சென்னை: பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி செலவிடப்படும்.

மதுரை: மதுரை மாநகராட்சியில் சுமார் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பை முற்றிலும் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டிலேயே பணிகள் தொடங்கப்படும்.


முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புகள் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.