கரூர் சம்பவத்தின் போது நடந்தது என்ன? விளக்கிய முதல்வர் விஜய்

Su.tha Arivalagan
Jul 10, 2026,01:19 PM IST

கரூர் : பெரம்பலூர், நாமக்கல் செல்வதற்கு முன் கூட்டம் அதிகமாக உள்ள அலர்ட் செய்த போலீசார், கரூர் சம்பவத்தின் போது மட்டும் அலர்ட் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ள முதல்வர் விஜய், கரூர் சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பதை கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு இன்று முதல் முறையாக முதல்வர் விஜய் கரூர் சென்றுள்ளார். அங்கு கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களையும், அரசு வேலைக்கான அரசாணையையும் வழங்கினார். முன்னதாக நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், கரூர் சம்பவத்தின் போது நடந்தது என்ன என்பதை விளக்கியதுடன், முந்தைய திமுக அரசு, தன் மீதான விமர்சனங்களுக்கு ஆவேசமாக பதிலளித்தார்.




கரூர் சம்பவத்தில் நடந்தது என்ன?


முதல்வர் விஜய் பேசுகையில், "ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் சில வலிகளையும், சில காயங்களையும் மறக்க முடியாது. எனக்கு அனைத்தையம் விட வலிமையும், வேதனையையும் தந்தது கரூர் சம்பவம் தான். பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்த போது அங்கிருந்த போலீஸ் எங்களை அலர்ட் செய்யாதது ஏன்? நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்ததுக்கு அழைத்து வந்து விட்டது போலீஸ் தான். இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் என சொல்லி பிரஷர் போட்டது யார்? எங்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து போலீசார் நாடகம் ஆடினார்கள். போலீசாருக்கு அந்த நேரத்தில் உத்தரவு போட்டது யார்? மக்களை சந்திக்கவும், மக்களிடம் பேசவுமே நான் கடந்த ஆண்டு கரூருக்கு வந்தேன்.


ஜனம் தான் எனக்கு முக்கியம்:


கரூர் சம்பவத்திற்கு முந்தைய திமுக அரசு தான் காரணம். அவர்கள் பாதுகாப்பு வழங்காததே இத்தனை பேர் உயிரிழந்ததற்கு காரணம். ஆனால் பயந்து ஓடி விட்டார். மக்களை சந்திக்கவில்லை என என்னை விமர்சித்தார்கள். வாய் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசுவீர்களா? நமக்கு இத்தனை வலிகளையும், காயங்களையும் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தகுந்த பதிலடி கொடுத்து விட்டீர்கள். ஆனால் அது மட்டும் போதாது மக்களே. எழுந்திருக்கவே முடியாதபடி நிரந்தமாக அடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நான் பணத்திற்காக அரசியலுக்கு வந்தவன் கிடையாது. மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன். என்ன நடந்தாலும் மக்களை விட்டு ஓட மாட்டேன். பணமா? ஜனமா? என கேட்டால் எனக்கு ஜனம் தான்டா முக்கியம். 


நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரான சதி, சூழ்ச்சியை இனி வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல கரூர் நெரிசலில் சிக்கியவர்களுக்கு கரூரில் தவெக சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும். பேசவில்லை பேசவில்லை என சொல்கிறார்கள். நாம் யாருடைய கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும். Talk less work more தான் நம்ம கொள்கை. ஒவ்வொரு துறையிலும் தோண்ட தோண்ட ஊழல் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது அரசு அலுவலகங்களுக்கு சென்று பாருங்கள். ஊழல், லஞ்சம் இல்லாத அரசு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அரசின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள். 


நான் ரீல் மாமன் இல்லை. ரியல் தாய்மாமன். அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படும். குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும். இப்போது தீயசக்தி யாருடைய கதவை தட்டிக் கொண்டிருக்கிறது என்பது ஊருக்கே தெரியும். தீயசக்தியும், தீர்ந்து போன சக்தியும் ஒன்று தான். கூட்டு களவாணிங்க. மக்கள் நம் பக்கம் இருக்கும் போது எதற்கு இந்த குதிரை, கழுதை பேரம் எல்லாம்? கரூர் கம்பெனிக்காரர் ஓடிக் கொண்டே இருக்கிறார். மற்றொருவர் வெளிநாட்டிற்கு ஓடி விட்டார்.  பேசு பேசு என்கிறார்கள். பேசினால் சட்டசபையில் இருந்து எழுந்து வெளியே ஓடி விடுகிறார்கள். பார்ட் ஃபண்ட் என்றதும் வெளியே ஓடி விட்டார்கள். கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள். இன்னும் பேசினால் என்ன ஆவீர்கள்? இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.