ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

Su.tha Arivalagan
Jul 22, 2026,10:10 AM IST

சென்னை:  தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததைக் கண்டிப்பதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் கூறியுள்ளார்.


டெல்லியில் நடந்து வரும் கரப்பான்பூச்சி மக்கள் ஜனதாக் கட்சியின் போராட்டம் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன. போராட்டங்களும் வெடித்து வருகின்றன.


இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.


நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


நீட் அறவே கூடாது:


நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.


கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.


மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.