828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

Su.tha Arivalagan
May 10, 2026,03:36 PM IST
சென்னை : தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என சொல்லும் அளவிற்கு தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு பல சுவாரஸ்யமான, ஆச்சரியமான விஷயங்களை செய்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றையே விஜய் மாற்றி எழுதி விட்டார் என்று சொன்னாலும் பொருந்தும்.

விஜய்யை இவ்வளவு புகழும் அளவிற்கு அப்படி என்ன நடந்து விட்டது? எல்லோரையும் போல் அவரும் கட்சி துவங்கினார், தேர்தலில் போட்டியிட்டார், வெற்றி பெற்றார், ஆட்சி அமைத்திருக்கிறார் என்று சாதாரணமாக இதை கடந்து சென்று விட முடியாது. 

விஜய்யின் இந்த வெற்றி, பொறுப்பேற்றுள்ள புதிய அரசு குறித்த விபரங்களை நன்கு கவனித்து பார்த்தால்...இவ்வளவு இருக்கிறதா என நிச்சயம் ஆச்சரியப்பட தோன்றும். அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் தமிழக அரசியல் வரலாற்றில் எதுவெல்லாம் முதல் முறையாக நடந்திருக்கிறது என்ற பட்டியலை பார்ப்போம்...



இதுவே முதல் முறை... 

- சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராவது இதுவே முதல் முறை.

- சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கும் வந்து புகழின் உச்சத்தை ஒருவர் தொடுவதும் இதுவே முதல் முறை.

- சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து, கட்சி ஆரம்பித்து, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பிரம்மாண்ட வெற்றியை பெற்று, ஆட்சியை பிடித்ததும் தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறை.

- களம் கண்ட முதல் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளதும் இதுவே முதல் முறை. 

இதற்கு முன் 2016 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்தார். இருந்தாலும் சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு, அவர்களையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து, அந்த தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்த முதல்வர் என்ற சாதனையை படைத்தார். அதற்கு பிறகு விஜய் மட்டும் தனித்து போட்டியிட்டு, பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றுள்ளார்.

- தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், இவ்வளவு இழுபறி, குழப்பங்களுக்கு பிறகு ஒரு கட்சி ஆட்சி அமைப்பதும் இதுவே முதல் முறை.

- ஆளும் கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு, அவர்களின் கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் ஒரு கட்சி ஆட்சி அமைத்துள்ளதும் இதுவே முதல் முறை.

- கட்சி ஆரம்பித்து 27 மாதங்களுக்குள், அதாவது 828 நாட்களில் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். இப்படி ஒரு மின்னல் வேக சாதனையைப் படைத்தவரும் அவர்தான்.

- தமிழ்நாட்டிலேயே எம்ஜிஆருக்குப் பிறகு அதிக அளவிலான வாக்கு சதவீதத்துடன் வென்ற கட்சி தவெகதான். உண்மையில் எம்ஜிஆர் வாங்கிய முதல் தேர்தல் வாக்கு சதவீதத்தையும் விஜய் கட்சி மிஞ்சி விட்டது இன்னும் ஒரு வரலாறு.