நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

Su.tha Arivalagan
Jul 17, 2026,05:29 PM IST

சென்னை: மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கிய நிலையில் தான் அதை முடித்து விட்டதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அப்போது வீடு வீடாக அலுவலர்கள் வந்து கணக்கெடுப்பை நடத்துவார்கள்.  அதற்கு முன்பாக பொதுமக்கள் தாங்களாகவே தங்களது விவரங்களை சுயமாக வழங்க ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது இன்று முதல் தொடங்கியுள்ளது.


மிகவும் எளிமையான முறையில் 33 கேள்விகளுக்குப் பதில் அளித்தால் போதுமானது. இதை இன்று முதல்வர் விஜய் செய்து முடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.




இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!  


நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை,  நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும்.  எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். 


இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!  


உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு!  வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.


அப்ப நீங்களும் செய்து முடித்து விட்டீர்களா?