டெல்லியில் முதல்வர் சி. ஜோசப் விஜய்.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியை சந்திக்கிறார்
டெல்லி: முதல்வர் சி. ஜோசப் விஜய், முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார். இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் பலரை அவர் சந்திக்கவுள்ளார்.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் தமிழக காவல்துறையின் சிறப்புப் படையினர் அவருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு தரவுள்ளனர். பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டுள்ளன. பூ அலங்கார வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தனது பயணத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை மாலையில் சந்திக்கவுள்ளார் முதல்வர் விஜய். அதேபோல அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கும் முதல்வர் விஜய், தமிழகத்தின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவைச் சமர்ப்பிக்க உள்ளார்.
தனது டெல்லி பயணத்தின் முக்கிய பகுதியாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 7 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைக்கிறார்.
நாளை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவுள்ளார்.
சோனியா காந்தி- ராகுல் காந்தியுடன் சந்திப்பு
இன்னொரு முக்கிய அம்சமாக, நாளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தவெகவுடன் காங்கிரஸ் முதல் கட்சியாக கை கோர்த்து அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி மேலும் உறுதியாகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இதனால் நாளை முதல் முறையாக சோனியா காந்தி, ராகுல் காந்தியை விஜய் சந்திக்கவுள்ளார். அதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவையும் அவர் சந்திக்கவுள்ளார். அவரிடம் மேகதாது திட்டம் தொடர்பாக விஜய் பேசவும் வாய்ப்புள்ளது. காரணம், கார்கே கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால். ராகுல் காந்தியிடமும் இதுகுறித்து விஜய் முறையிடவும் வாய்ப்புள்ளது.
தவெக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஐ மற்றும் சிபிஎம் தேசியத் தலைவர்களையும் முதல்வர் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.