பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கு : முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி
சென்னை : பெரம்பூர் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதா இல்லையா என்பதை முழுமையான விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். பிறகு பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் தினேஷ் என்பவர், முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். பண்ருட்டியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்களைத் தனது வேட்புமனுவில் முதல்வர் விஜய் மறைத்துவிட்டதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தரப்பு வாதம் :
தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கிற்கு உகந்த முகாந்திரம் இல்லை என்றும், நீதிமன்றம் இதை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்றும் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவு :
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உண்மையிலேயே மறைக்கப்பட்டனவா என்பது குறித்து விரிவான விசாரணையின் மூலமே தீர்மானிக்க முடியும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பால் முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் பெற்ற வெற்றிக்கு எதிரான சிக்கல் இன்னும் தொடர்கிறது. ஒருவேளை வேட்புமனுவில் அவர் சொத்து விபரங்களை மறைத்தது உண்மை என தெரிய வந்தால் அவரது வெற்றி செல்லாது என தீர்ப்பு வரவும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதாவது தொகுதியில் போட்டியிட்டு கண்டிப்பாக வெற்றி பெற்று எம்எல்ஏ., ஆக வேண்டிய நெருக்கடி நிலை விஜய்க்கு ஏற்படும். அப்படி 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ., ஆவதற்கு, பெரம்பூர் தொகுதி வெற்றிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வரும் நாளில் ஏதாவது ஒரு தொகுதி காலியாக இருந்து, அந்த தொகுதிக்கு தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும்.