கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

Su.tha Arivalagan
Aug 07, 2026,11:26 AM IST

சென்னை: சட்டப்பேரவையில் காவிரி நீர் விவகாரம் மற்றும் குறுவை சாகுபடி நிவாரணம் தொடர்பாக எழுந்த விவாதங்களின் போது, முதலமைச்சர் விஜய் விரிவாகவும் ஆவேசமாகவும் உரையாற்றினார். தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெள்ளத்தெளிவாகப் பேரவையில் அவர் பதிவு செய்தார்.


காவிரி நமக்கு உயிர் ஆதாரம்:

பேரவையில் பேசிய முதல்வர் விஜய், "காவிரி நதி நீர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குக் வெறும் நீர் மட்டுமல்ல, அது நமது உயிர் ஆதாரம் மற்றும் உணர்வு ரீதியானது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியும் இந்த அரசுக்கு இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


கர்நாடகா செல்ல திட்டமிட்டது ஏன்?




காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகப் பெங்களூரு செல்லத் திட்டமிட்டது குறித்துப் பேசிய அவர், "பகை நாடுகளே தங்களுக்கு இடையேயான எல்லை மற்றும் நீர்ப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளும் போது, பக்கத்து மாநிலத்துடன் பேசிப் பார்க்கலாமே என்று தான் நான் முடிவெடுத்தேன். நேரில் சென்று பேசுவதன் மூலம் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று உறுதியாக நம்பினேன். அப்படிச் செல்லும் போது ஏதேனும் அவமானம் நேர்ந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அதையும் தாங்கிக் கொள்ளத் தயாராகவே இருந்தேன்" எனக் குறிப்பிட்டார்.


விவசாயிகளுக்கு ஏற்கெனவே நிவாரணம்:

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், "விவசாயிகளுக்குக் குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக ஏற்கெனவே உரிய நிவாரண உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், 'அரசியலே நாங்கள்தான்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நபர்கள், தினமும் செய்தித்தாள்களைச் சரியாகப் படித்திருந்தாலே நாட்டின் நடப்பு நிலவரமும், அரசு மேற்கொண்ட நிவாரண நடவடிக்கைகளும் தெரிய வந்திருக்கும்" என்று காட்டமாகக் விமர்சித்தார்.


தமிழக மக்களின் உரிமைகளையும், விவசாயிகளின் நலன்களையும் காப்பதில் இந்த அரசு என்றும் உறுதியோடு செயல்படும் என்ற செய்தியை முதல்வர் விஜய்யின் இந்த உரை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.