திமுகவுக்குப் பதிலடியாக.. கருணாநிதியின் ஆயுதத்தைக் கையில் எடுத்த முதல்வர் விஜய்!
சென்னை: தனத அரசுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க மறைந்த கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய அதே வார்த்தையைக் கையில் எடுத்துள்ளார் முதல்வர் சி ஜோசப் விஜய்.
தவெக அரசு தனித்த பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடியவில்லை. இதனால் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அங்கிருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தர முன்வந்தன.
அதேபோல இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு கொடுத்துள்ளது. அமமுக கட்சியின் ஒரே எம்எல்ஏவும் விஜய் பக்கம் வந்து விட்டார். இதேபோல எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவிலிருந்து 25 எம்எல்ஏக்கள் பிரிந்து வந்து விஜய் அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
இதை வைத்து இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பெரும்பான்மை பலம் இல்லாத ஆட்சி என்று விமர்சித்துப் பேசினார். இதற்கு தனது பதிலுரையின்போது முதல்வர் விஜய் கூறுகையில், எங்களை சிறுபான்மை அரசு என்று கூறுகிறார்கள். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆமாம், சிறுபான்மை அரசுதான் நாங்கள். சிறுபான்மை மக்களுக்கான அரசு இது. அதில் எங்களுக்குப் பெருமை என்று கூறியிருந்தார்.
இந்த பதிலடி உண்மையில் கருணாநிதி பயன்படுத்திய வார்த்தையாகும். 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனித்தப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து பாமகவின் ஆதரவுடன் திமுக ஆட்சியமைத்தது.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா, தொடர்ந்து மைனாரிட்டி திமுக அரசு என்று தொடர்ந்து கூறி வந்தார். இது மக்களிடையே வெகு வேகமாக ரீச் ஆனது. ஆனால் கருணாநிதி இதையெல்லாம் சமாளிக்கத் தெரியாமலா இருப்பார்.. படு லவாகமாக இதை எதிர்கொண்டார்.
தன்னை எதிர்ப்பவர்கள் தன் ஆட்சியை "மைனாரிட்டி அரசு" என்று அழைத்தபோது, "ஆமாம், இது மைனாரிட்டி (சிறுபான்மையினர், நலிந்தவர்கள்) மக்களுக்கான அரசு" என்று பெருமையுடன் குறிப்பிட்டார். இந்த அரசு ஏழைகள், தலித் மக்கள், மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காகச் செயல்படும் அரசு என்பதை வலியுறுத்தினார்.
கருணாநிதியின் இந்த பதிலடியும் மக்களைக் கவர ஆரம்பித்தது. இதனால் ஜெயலலிதா படிப்படியாக தனது மைனாரிட்டி திமுக அரசு என்று கூறுவதைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார் என்பது நினைவிருக்கலாம். இப்போது கருணாநிதி பாணியில் திமுகவுக்குப் பதிலளிக்க ஆரம்பித்துள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.