கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்!
கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு, கோவை விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஆளரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் 21 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், மாணவியின் நண்பரை கொடூரமாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), அவரது சகோதரரான
கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி வி. சுந்தர்ராஜன் இன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கினார்: குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார். மேலும் குற்றவாளிகள் மூவருக்கும் வாழ்நாள் முழுதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சம்பவம் நடந்த 126 நாட்களுக்குள் (சுமார் 4 மாதங்கள்) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.