கோவை வேதநாயகி அம்மனுக்கு தந்தத்தொட்டில் வழங்கிய ஆங்கிலேய கலெக்டர்!
- பா.சத்தியநாராயணன்
கோயம்பத்தூர்: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, வெள்ளைக்காரர்களும் கூட நிறைய நல்லது செய்துள்ளனர்.. ஆச்சரியமாக இருக்கிறதா.. வாங்க இந்த செய்தி உங்களுக்குத்தான்.
18 ஆம் நூற்றாண்டில் கோயம்புத்தூரில் வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் கலெக்டராக பதவி வகித்தார். அந்த ஊரில் அவரின் பங்களாவிற்கு அருகில் இருந்த கோயிலில் குடி கொண்டிருக்கும் வேதநாயகி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் கூறுவதை கேட்டு தானும் அந்தப் பெண் கடவுளை தரிசிக்க விரும்பினார். அவர் கேட்டுக் கொண்டதற்காக கோவிலின் மதிற்ச்சுவரில் மூன்று துளைகளை இட்டு அந்த துளைகளின் வழியே அவர் வேதநாயகி அம்மனை காண ஊர் மக்கள் வழி செய்தனர். அவ்வப்போது கலெக்டர் வில்லியம் காரோவும் அம்மனை கண்டு களிப்பார் .
1804 ஆண்டின் மழைக்காலம் ஒரு நாள் கோயம்புத்தூரில் மிக கனமழை பெய்தது. அப்பொழுது கலெக்டராக இருந்த வில்லியம் காரோ இன்ஸ்பெக்டர்களுக்கான பங்களாவில் உறங்கிக் கொண்டிருந்தார். கனமழை வெளுத்து வாங்கியது. தூங்கிக் கொண்டிருந்த வில்லியமை யாரோத் தட்டி எழுப்பி கூப்பிடுவது போல இருந்தது, கண்விழித்துப் பார்த்தபோது ஒரு சிறு பெண் தன்னை வெளியே வருமாறு அழைப்பதை கண்டு தனது பங்களாவை விட்டு வெளியே வந்தார் ..அவர் வெளியே வந்த அடுத்த நொடி அவர் தங்கியிருந்த பங்களாவின் தளம் கன மழையில் நொறுங்கி கீழே விழுந்தது.
கணப்பொழுதில் கலெக்டர் உயிர் தப்பினார்.. கலெக்டர் வில்லியம் கரோவிற்கு ஒன்றும் புரியவில்லை... தன்னை தட்டி எழுப்பிய பின் அந்த சிறுமி, குடுகுடுவென்று ஓடிப்போய் பங்களாவிற்கு அருகில் இருந்த கோவிலுக்குள் நுழைந்ததை பார்த்தார்.. அந்தக் கோவிலுக்கு சென்று அர்ச்சகர் இடம் நிகழ்ந்ததை கூறினார் .. அர்ச்சகர், தங்களை காப்பாற்றியது இந்த கோவிலில் குடி கொண்டிருக்கும் வேதநாயகி அம்மன் தான் என்று கூற, தன்னைக் காப்பாற்றிய வேதநாயகி அம்மனுக்காக கலெக்டர் வில்லியம் காரோ தங்தத்தால் செய்த ஒரு அழகிய தொட்டிலை அந்தக் கோயிலுக்கு காணிக்கையாக அளித்தார்.
அந்த தொட்டிலில் தன்னுடைய கையெழுத்தையும் பொறிக்கச் செய்துள்ளார்... இன்று வரை அந்தத் தொட்டில் அந்த கோவிலில் காண்போரை வியக்க வைக்கிறது.... இந்தச் செய்தி குறித்த கல்வெட்டும் அந்தக் கோவிலில் இடம் பெற்றுள்ளது... அயல்நாட்டினரையும் தன் மக்கள் போல காத்த வேதநாயகி அம்மனை நீங்களும் சென்ற தரிசித்து வாருங்களேன்... என்ன கிளம்பிட்டீங்களா?
(கட்டுரையாளர் பா.சத்தியநாராயணன், ஆசிரிய பயிற்றுனர், கீழ்வேளூர் ஒன்றியம், நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்.. தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆங்கில பாட புத்தகம் வடிவமைப்பு குழுவில் இடம் பெற்றுள்ளார்.. ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.. வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.