கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
சென்னை: கோவை விமான நிலையம் அருகே மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த மாணவி கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது ஆண் நண்பருடன் கோவை விமான நிலையம் அருகே பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் மாணவியின் ஆண் நண்பரை தாக்கி விட்டு, அந்த மாணவியை தூக்கிச் சென்றுள்ளனர். 3 பேர் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவர் குறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், அந்த மர்ம நபர்கள் 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அறிந்த அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை:
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.
இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், கோவை விமானநிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கொடிய முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் மாணவிகளும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.
பிருந்தாவன் நகரில் தனியார் கல்லூரி மாணவி தமது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் தகராறு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மாணவியும், அவரது நண்பரும் மகிழுந்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அவர்களின் மகிழுந்தை தடுத்து நிறுத்திய கும்பல், மகிழுந்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவியையும், அவரது நண்பரையும் வெளியே இழுத்துள்ளனர். நண்பரைத் தாக்கி காயப்படுத்திய அவர்கள், மாணவியை அங்கிருந்து கடத்திச் சென்று கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியை இன்று காலை அங்குள்ள புதரில் கண்டெடுத்த காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு திசம்பர் 23-ஆம் நாள் மனித மிருகத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே கடந்த ஜூலை 12-ஆம் நாள் திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கம் என்ற இடத்தில் 8 வயது மாணவி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கொடியவனால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இப்போது கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.தமிழ்நாட்டில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 2394 , அதாவது 52.30% அதிகம் ஆகும். இதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும், போதைப் பொருள்களின் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோவையில் தனியார் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தரமான மருத்துவமும், மனநல ஆலோசனையும் வழங்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனைக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்:
இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது, வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள், “தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என வெட்டி வசனம் பேசும் அறிவாலயத்தின் ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர், இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோ கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், கோவை விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி - கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், அவரது ஆண் நண்பர் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பெரும் அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகளைக் கடுமையாக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும், இதுபோன்ற கொடூரச் செயல்கள் தொடர்வது, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அடியோடு இழக்கச் செய்திருக்கிறது.
எனவே, அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி மற்றும் அவரது நண்பருக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.