Monday Motivation: வாரீர்! வாரீர்!! பிள்ளைகாள்.. இலக்கணம் எளிதே தமிழ் இலக்கணம் எளிதே!
- முனைவர் தி. தங்கலட்சுமி
இலக்கணம் எளிதே!
தமிழ் இலக்கணம் எளிதே!
பயில்வதற்குப் பல்சுவை நிறை கனியே!
கற்பதற்குக் கவின்மிகு கலையே!
தொல்காப்பியரும் நன்னூலாரும்
நம்மினிய சுற்றமே!
நம் தொல் மூதாதையரின் மூளையில்
உதித்த சொற்கள் அத்தனையும்
நல் வைரங்களே!
பாட்டனின் பாடல் கண்டு பயப்படலாமோ?!
ஓடும் பாம்பை வெறும் கையால் பிடித்திடும்
வீரயிளமை நலம்கொண்ட பருவப் பிள்ளைகாள்...
முப்பாட்டனின் நூல்நயம் கண்டு
வியக்க வேண்டுமேயன்றி,
வெறுப்பை வளர்ப்பது தகுமோ?!
முப்பாட்டனின் காலச் சூழலை
இக்காலச் சூழலோடு ஒப்பிட்டு
காலத்தின் கோலத்தை எண்ணி
காலாகாலத்தில் களித்து இன்புற வாரீர்!!!
தமிழின் இனிமையை எளிமையை
பண்டைச் செம்மாந்த மொழிநடையைச்
செவிமடுத்து செழிப்புற்று வாழ
வாரீர்! வாரீர்!! பிள்ளைகாள்!!!
இலக்கணம் எளிதே!
தமிழ் இலக்கணம் எளிதே!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).