மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

Su.tha Arivalagan
Jun 04, 2026,01:49 PM IST

சென்னை: தமிழ்நாடு வேலையில்லா கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகியோரை நேரில் சந்தித்து கணினி ஆசிரியர்களின் கோரிக்கையை மனுவாக அளித்தனர். 


இதுதொடர்பாக தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:


மத்திய அரசு சமக்ர சிக்க்ஷா ‌ICT (information communication technology) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்கவும் அதற்கு கணினி பயிற்றுநர்களை நியமிக்க (administrator cum instructor ) செய்யவும் நிதி வழங்குகின்றது. 


கணினி அறிவியல் பாடத்தை 6 முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வர வேண்டும். மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திற்கும் பாட வேளைகள் ஒதுக்கி தந்து தனி பாடமாகவும் , செய்முறையாகவும் கற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் ஆய்வகங்களை மேலாண்மை செய்ய வேண்டும்.இதற்கு ஒரு கணினி ஆய்வகம் அமைக்க ரூபாய் 6.40 லட்சம், ஒரு கணினி பயிற்றுநர் நியமிப்பதற்கு ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மத்திய அரசு வழங்குகிறது.


அதன் அடிப்படையில் மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தற்போது தான் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில்6454 பணியிடங்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 8209 பணியிடங்களுக்கும் மொத்தம் 14663 கணினி பயிற்றுநர்களை நியமிக்க மாதம் ரூபாய் 15,000 நிதி வழங்குகிறது.அரசு உயர்நிலை மேல்நிலைப் செயல்பாட்டில் இருக்கும் கணினி ஆய்வகங்களுக்கு கணினி பயிற்றுனர் நியமிக்கப்படவில்லை. அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வுகள் அமைப்பதற்கு முன் கணினி பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் 9-10ம் வகுப்பிற்கு இதுவரை நியமிக்கப்படவில்லை.




8209 நடுநிலைப் பள்ளிகளில்(6-8) ஆய்வகங்கள் தொடங்குவதற்கு முன்பே கணினி பயிற்றுநர்கள் தனியார் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர் இதில் 2% சதவீதம் பேர் கூட இந்த பணிக்கு தகுதி பெற்றவர்கள் அல்ல.தனியார் நிறுவனத்தின் மூலம் பெயருக்காக தேர்வு நடத்தி இல்லம் தேடி தன்னார்வலர்களை தேர்வு செய்துள்ளது. இதில் பலருக்கு பன்னிரண்டாம் வகுப்பில் கூட கணினியில் பாடத்தை கற்காதவர்கள் உள்ளனர் @ symbol கூட போடதெரியாதவர்களுக்கு கணினி ஆசிரியர் பணி வழங்கலாமா ??


தலையாய பணி கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுப்பது மட்டுமே ஆனால் மத்திய அரசு சொன்னதை எதையும் பொருட்படுத்தாமல் இந்தப் பணியிடங்களுக்கு தகுதி இல்லாதவர்களை மாநில அரசு EMIs பணி செய்ய மட்டும் இவர்களை நியமனம் செய்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 60,000 மேற்பட்டோர் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்றிருந்த போதிலும் கணினி பயிற்றுநர் பணிக்கு இவர்களை நியமிக்காமல் அவசரக்கோலத்தில் ஆசிரியர்களுக்காக வந்த நிதியை அலுவலக பணிக்கு பயன்படுத்தி விட்டனர்.


2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கணினி பயிற்றுனர் பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் படித்தவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. தற்போது ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு கணினி பயிற்றுநர்கள் நியமிக்கவில்லை நடுநிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் முறையான கல்வி தகுதி இல்லாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


அடிப்படை கணினி அறிவு இன்றி அரசு பள்ளி மாணவர்கள் இருக்கின்ற நிலையில் artificial intelligence (AI) அடித்தளம் இல்லாத அடுக்கு மாடி கட்டிடத்திற்கு ஒப்பாகம் அல்லவா மாண்புமிகு கல்வி அமைச்சர் கூறி இருப்பது. மத்திய அரசு samagra Shiksha ICT நிதி கணினி அறிவியல் கல்விக்காக வழங்குகின்ற நிதியை முறையாக பயன்படுத்தி அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்கள் உள்ளது போன்று கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாக கொண்டு வந்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் கணினிக் கல்வி கிடைக்கப்பெற வேண்டும். கணினி பாடத்திற்கென்று தனி பாட வேலைகளும் பாட புத்தகங்களும் விரைவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் தமிழக முதல்வர் அவர்களும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வருவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


TN SPARK திட்டம்: 


தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் வாயிலாக அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் போன்ற பாடங்களை புத்தக வடிவில் 2025 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட பள்ளிகளுக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு  கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு இரண்டே நாள் பயிற்சிகள் மட்டும் கொடுத்து காணொளி காட்சியின் வாயிலாக வாரத்திற்கு ஒருமுறை 30 நிமிடங்கள் காண்பிக்கப்படுகிறது. முறையான ஆசிரியர்கள் இன்றி இந்த புத்தகத்தை கற்பிக்காமல் இந்த திட்டமும் பெயருக்காகவும் விளம்பரத்திற்காகவும் செயல்படுத்தப்பட்ட திட்டமே ஒழிய மாணவர்களின் கல்வி நலனுக்காக இந்த திட்டத்தை கொண்டு வரவில்லை. 


தற்போது தமிழக கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் நிலை கணினியின் அடிப்படை பாகங்களை கூட இயக்கத் தெரியாத நிலையாக உள்ளது இதனை கருத்தில் கொண்டு முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திமுக செய்த வரலாற்றுப் பிழையை தொடராமல் கணினி அறிவியல் பாடத்திற்கு என்று தனி பாட புத்தகங்கள் வழங்கி அதற்கான பாட ஆசிரியர்களை மத்திய அரசின் நிதியின் மூலம் நியமனம் செய்து முறையான கணினி அறிவியல் கல்வியை மாணவர்களுக்கு போதிக்க வேண்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.