71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கும் மாவட்டத் தலைவர்களை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. நீண்ட தாமதம் நிலவி வந்த நிலையில் தற்போது மாவட்டத் தலைவர்களை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. இதுதொடர்பாக சில புகார்களும் நிலவி வந்தன. சர்ச்சைகளும் நீடித்து வந்தன. இதனால் குழப்பமும் நிலவிக் கொண்டிருந்தது.
இடையில் கூட்டணி தொடர்பான குழப்பங்களும் சேர்ந்து கொண்டதால், தொண்டர்களும் விரக்திக்குள்ளானார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரை டெல்லி தலைமை நேரில் அழைத்து சமீபத்தில் விவாதித்தது. பல முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்தது.
இந்தப் பின்னணியில் நேற்று 71 மாவட்டத் தலைவர்கள் நியமனத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதன் மூலம் மாவட்டத் தலைவர்கள் நியமனம் தொடர்பாக நிலவி வந்த பூசல் முடிவுக்கு வந்துள்ளது.
இருப்பினும் இந்தப் பட்டியலில் கோயம்பத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் இடம் பெறவில்லை. அங்கு விரைவில் நியமனம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சென்னையில்தான் அதிக மாவட்டங்கள் உள்ளன. அதாவது அங்கு மட்டும் 7 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களுக்கு மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தனியாக தலைவர்களை நியமித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
ஆவடி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, வேலூர் மாநகராட்சிகளுக்கு தனியாக தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநகராட்சிகளுக்கும் இதேபோல தலைவர்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.