கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் காங்கிரஸ் எம்.பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.
கரூரில் நடந்த தவெக கூட்டத்தின்போது மிகப் பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யும் இந்த சம்பவம் தொடர்பாக பெரும் சோகமாகியுள்ளார். தனது வீட்டிலேயே கடந்த 2 நாட்களாக முடங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது கரூரில் என்ன நடந்தது என்பது குறித்து விஜய்யிடம் ராகுல் காந்தி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. விஜய்யும் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கியதாக தெரிகிறது. இதையடுத்து விஜய்க்கு ராகுல் காந்தி ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஊக்கமுடன் செயல்படுமாறும் அவர் அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது.
இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, விஜய் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அனேகமாக முக்கியப் புள்ளி யாரையேனும் அவர் சந்திக்கப் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருடன் பாதுகாவலர்களும் உடன் சென்றுள்ளனர்.