திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைக்கிறது காங்!
சென்னை: விஜய்யுடன் ரகசியமாக பேசி வருகிறது காங்கிரஸ் என்று பரவி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது காங்கிரஸ். திமுகவுடன் பேச ஐந்து பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் தற்போதைக்கு கூட்டணி இல்லாமல் இருக்கும் ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான். விஜய்யின் இக்கட்சிக்கு ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. விசிக வரப் போகிறது, காங்கிரஸ் வரப் போகிறது, அதிமுகவுடன் கூட்டணி என்றெல்லாம் செய்திகள் பறந்தன. ஆனால் போகப் போக அந்த பரபரப்பு அடங்கி விட்டது.
அதேசமயம், கரூர் சம்பவத்திற்குப் பின்னர் அதிமுக, பாஜகவுடன் விஜய் கூட்டணி சேருவார் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் திடீரென அப்படியே யு டர்ன் போட்டு, காங்கிரஸுடன் விஜய் ரகசியமாக பேசி வருகிறார் என்று செய்திகள் பரவின. விஜய்யுடன் கை கோர்த்தால், தமிழ்நாடு மட்டுமல்ல, கேரளாவிலும் கூட காங்கிரஸுக்கு லாபம் கிடைக்கும் என்று காங்கிரஸுக்குள் வலுவான பேச்சு அடிபடுவதால் விஜய் கூட்டணிக்கு காங்கிரஸ் தரப்பிலும் ஒரு ஆர்வம் உள்ளதாம்.
தற்போது அதிமுகவை வைத்து பாஜக லாபம் பெற்று வருவது போல, நாமும் விஜய்யை வைத்து லாபம் பெற முடியும். அப்படி நடந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு மீண்டும் உயிர் வரும் என்ற நம்பிக்கையும் காங்கிரஸுக்கு உள்ளதாம். எதிர்காலத்தில் விஜய் மேலும் வலுவடைவார். அப்படி வரும்போது நாமும் கூடவே இருந்தால் நமக்கும் அது பெரிய லாபம் தரும் என்றும் காங்கிரஸ் நம்புகிறதாம்.
இப்படி பேச்சுக்கள் அடிபட்டு வந்ததால் திமுக தரப்பும் அப்செட் ஆகி இருந்தது. ஆனாலும் காங்கிரஸ் தடாலடியாக எந்தத் தவறையும் செய்யாது என்ற நம்பிக்கையில் திமுக தலைமை உள்ளதாம். இந்த நிலையில்தான், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது திமுகவுடன் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக பேசுவதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளதாம்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட ஐந்து பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனராம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழு வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்
இந்தியா கூட்டணி யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜய் தரப்புடன் தாங்கள் பேசவில்லை என்பதை காங்கிரஸ் கட்சி மறைமுகமாக சுட்டிக் காட்டியிருப்பதாக தெரிகிறது. அதேசமயம், விஜய்யுடன் பேச்சு நடந்து அது தோல்வியில் முடிந்து விட்டதோ என்ற கேள்வியையும் இது எழுப்புவதாகவும் எண்ணலாம்.