கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மிக நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, கட்சியின் அகில இந்திய தலைமை இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 01ம் தேதி அறிவிக்கப்பட்டது. 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபைக்கான தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களிலும், பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் இடதுசாரிகள் 35 இடங்களிலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டி உடன் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவியதால் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பது தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு வழியாக முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்து, இன்று அறிவித்துள்ளது.
கேரள காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வந்த வி.டி. சதீசன், தற்போது மாநிலத்தின் உயரிய பதவியான முதலமைச்சர் நாற்காலியில் அமரவுள்ளார். 61 வயதான இவர், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் இளம் தொண்டர்கள் என இருதரப்பினரின் ஆதரவையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு, கேரளாவில் கட்சியை வலுப்படுத்தவும், நிர்வாகத்தை செம்மைப்படுத்தவும் வி.டி. சதீசன் சரியான தேர்வு என காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
யார் இந்த வி.டி. சதீசன்?
வி.டி. சதீசன், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சட்ட வல்லுநரான இவர், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்கள் நலன் சார்ந்த விவாதங்களை முன்வைப்பதிலும் கைதேர்ந்தவர். கேரள காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த இவர், தற்போது முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
தூய்மையான நிர்வாகம் மற்றும் துடிப்பான தலைமை என்ற பிம்பத்தைக் கொண்டுள்ள சதீசன், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளில் புதிய வேகத்தைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பதவியேற்பு விழா குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வி.டி.சதீசன் தேர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து கேரளம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி. சதீசனுக்கு முன்னால் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மீட்பு மற்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு எனப் பல சவால்கள் காத்திருக்கின்றன. இருப்பினும், அவரது நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் நேர்மையான அணுகுமுறை ஆகியவை மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.