துருக்கியில் எங்களது கிளையா.. அமித் மாள்வியா, அர்னாப் கோஸ்வாமி மீது .. காங்கிரஸ் அவதூறு புகார்
பெங்களூரு: துருக்கி நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு கிளை இருப்பதாக கூறி பொய்யான தகவலைப் பரப்பியதாக பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாள்வியா மற்றும் ரிபப்ளிக் டிவி தலைமை எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி மீது பெங்களூரு கோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், காங்கிரஸ் கட்சி குறித்து தவறான செய்தியை மக்களிடம் பரப்பும் வகையிலும் இந்த பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக அந்தப் புகாரில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு மூலம் புகார் தரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் போட்டுள்ள செய்தியில், கட்சியின் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது. நாட்டு மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தும் வகையிலும், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜனநாயகத்தின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இது. கட்சி குறித்தும், கட்சி தலைவர்கள் குறித்தும் தவறான அவதூறான செய்திகளை பரப்புவோர் மீது அமைதி காக்க முடியாது. இதை உறுதியாகவும், சட்ட ரீதியாகவும் அணுகி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்தான்புல் காங்கிரஸ் மைய கட்டடத்தைக் காட்டி அது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துருக்கி கிளை அலுவலகம் என்று அமித் மாள்வியாவும், அர்னாப் கோஸ்வாமியும் தவறான தகவலைப் பரப்பியதாக காங்கிரஸ் புகார் தெரிவிக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் மோதலின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி நடந்து கொண்டது. இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. துருக்கி சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்த இந்தியர்கள் கூண்டோடு அதை ரத்து செய்தனர். இதனால் துருக்கி சுற்றுலாத்துறைக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் துருக்கியோடு தொடர்புப்படுத்தி இந்த செய்தி வெளியாகி பரபரப்பைக் கிளப்பி விட்டது.