கூட்டணிக்கு வர விஜய்யிடம் காங்கிரஸ் வைத்த டிமாண்ட்...ஆடிப்போன தவெக
Jan 09, 2026,02:59 PM IST
சென்னை : தவெக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பல மாதங்களாக தகவல்கள் பரவி வந்தன. இதை உண்மை தான் எனும் வகையில் சிலரும், இல்லை என்று சிலரும் மறுப்பு தெரிவித்து வந்தனர். காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து அடிக்கடி விஜய்யை சந்தித்து பேசி வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.
இதற்கிடையில் காங்கிரஸ், என்டிஏ இரண்டில் எந்த கூட்டணிக்கு செல்லலாம் என விஜய் ஆலோசித்து வருவதாகவும், காங்கிரஸ் கூட்டணியை தான் அவர் விரும்புவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் பல காலமாக கூட்டணியில் இருக்கும் திமுக கூட்டணி உறவை எப்படி முறித்துக் கொள்வது என்ற தயக்கம் காரணமாகவும், காங்கிரஸ் கட்சிக்குள் சிலர் திமுக கூட்டணியில் தான் இருக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி வருவதாலும் தான் முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறி வருவதாகவும் வேறு ஒரு தகவல் வெளியானது.
இந்த நிலையில் நேற்று ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது தொடர்பான வழக்கில் தணிக்கை வாரியத்தின் எதிர்ப்பை காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கண்டித்துள்ளனர். ஜனநாயகன் படத்திற்கு திரையுலகை சேர்ந்த சிலர் குரல் கொடுத்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் தவெக தரப்பே அமைதி காத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி, செல்வ பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர் அழகிரி, மாணிக் தாகூர் உள்ளிட்ட பலரும், இந்த விவகாரத்திற்கு பாஜக தான் காரணம். ஜனநாயகன் படத்தை வைத்து பாஜக, விஜய்யை மறைமுகமாக மிரட்டுகிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்கள்.
எதற்கு ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டும் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு தருகிறார்கள் என விசாரித்தால், கூட்டணி பேச வரும் போது விஜய்யிடம் காங்கிரஸ் கட்சி வைத்த டிமாண்ட் தான் இதற்கு காரணமாம். தங்களின் டிமாண்டை விஜய் நிச்சயம் ஏற்றுக் கொள்வார் என காங்கிரஸ் நம்புகிறதாம். அதனால் தான் இந்த ஆதரவாம். ஆனால் காங்கிரஸ் முன் வைத்த டிமாண்டை கேட்டு தவெக தரப்பு ஆடிப்போய் உள்ளதாம்.
அப்படி என்ன டிமாண்ட்?
தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் தவெக கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட வேண்டும். ஏற்கனவே விஜய் அறிவித்தது போல் அவரே முதல்வர் வேட்பாளராக இருந்து கொள்ளலாம் என்பது தான் காங்கிரஸ் தரப்பில் தவெக.,விடம் முன் வைக்கப்பட்ட டிமாண்ட். இதை விஜய் ஏற்றுக் கொண்டால் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக உடன் இணைந்து, விஜய்யின் ஸ்டார் செல்வாக்கை வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என காங்கிரஸ் நினைக்கிறதாம்.
காங்கிரஸ் முன் வைத்துள்ள இந்த டிமாண்டை ஒருவேளை விஜய் ஏற்கிறார் என்றால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ஒருவேளை தேர்தலுக்கு பிறகோ அல்லது தேர்தல் நெருக்கத்திலோ, தேசிய கட்சி என்ற வகையில் முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் தேர்வு செய்வோம் என காங்கிரசை சேர்ந்த ஒருவரை கூட அவர்கள் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது. அது விஜய்க்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் என்ன செய்வது என தெரியாமல் விஜய் தரப்பு அதிர்ச்சியில் உள்ளதா சொல்லப்படுகிறது.