வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
சென்னை: தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் வீடு கட்டும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் அரசு அனுமதியுடன் 400க்கும் மேற்பட்ட எம்.சாண்ட் தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு ரூ.90 என்ற அளவில் விதிக்கப்பட்டு வந்த ராயல்டி, இப்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுகிறது. இதனால், ரூ.90 என்ற அளவில் விதிக்கப்பட்டு வந்த ராயல்டி இப்போது ரூ.160 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் சுமுக நிலை ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மணல் மற்றும் எம்.சாண்ட் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் கட்டப்பொறியாளர்கள், வீடுகட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான செலவு 30 சதவீதம் கூடியுள்ளதால் பொதுமக்களும், கட்டிட பொறியாளர்களும் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர்.