தொடர் கனமழை... வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு!
வயநாடு: வயநாடு முண்டகை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்தாண்டு ஜூலை மாதம் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கும் மேற்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். பலரது நிலைமை என்னவென்றும் தெரியாமல் போனது. இந்த துயரச் சம்பவத்தால் ஒட்டு மொத்த நாடும் கடும் துயரம் அடைந்தது.
இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை காரணமாக தற்போது கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த முறை நிலச்சரிவு ஏற்பட்ட போது இந்திய ராணுவ வீரர்களால் அமைக்கப்பட்ட பெய்லி பாலத்தின் கீழ் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புன்னப்புழா ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அந்த ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பலத்த மழையால் வயநாட்டில் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கனமழையால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே வருவாய்த்துறை அதிகாரிகள் வானரணி பகுதி மற்றும் முண்டக்கையொட்டிய பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.