கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!

Meenakshi
May 19, 2025,07:11 PM IST

புதுடெல்லி: கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்கு, அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கர்னல் சோஃபியா குரேஷி உள்ளிட்ட அதிகாரிகள் வெளியிட்டு வந்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை குறித்து  விஜய் ஷா பேசுகையில், பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்தே பிரதமர் மோடி அழித்துவிட்டார் என்று கூறியிருந்தார்.


இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணையை தொடங்கியது மத்திய பிரதேச உச்சநீதிமன்றம். அப்போது, அமைச்சர் விஜய் ஷா மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு  உத்தரவிட்டது. அதன்படி விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தன்மீதான வழக்குப்பதிவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் ஷா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், நாடு பதற்றமான சூழலில் இருந்தபோது, மாநில அமைச்சராக இருப்பவர் மிகுந்த பொறுப்புணர்வுடன் வார்த்தைகளை வெளியிட வேண்டும் என்று அவரின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தது.




இதனையடுத்து மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் விஜய் ஷா. இந்நிலையில், இன்று இவ்வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 


அப்போது, மன்னிப்பு கேட்டு அமைச்சர் வெளியிட்ட வீடியோ குறித்து நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், நான் பேசியது மனதை புன்படுத்தியிருந்தால் எனக் குறிப்பிட்டு மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளீர், இந்த வீடியோவில் உண்மைத்தன்மை இல்லை. இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே வீடியோ வெளியிட்டுள்ளீர். நாங்கள் மன்னிப்பை ஏற்கவில்லை. நிராகரிக்கிறோம். எங்களுக்கு மன்னிப்பு தேவையில்லை, வழக்கு நீதிமன்றத்துக்கு வந்ததால் மன்னிப்பு கேட்கிறீர்கள். நீங்கள் வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், பாஜக அமைச்சர் விஜய் ஷா பேச்சு ஒட்டுமொத்த நாட்டுக்கும் வெட்கக்கேடு என்று தெரிவித்தனர்.


 அமைச்சர் விஜய் ஷா மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை நாளை காலை 10 மணிக்குள் அமைக்க மத்திய பிரதேச அரசிற்கு உத்தரவிடுகிறோம். வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐஜி அல்லது ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் இந்த விசாரணைக்குழு இருக்க வேண்டும். இந்த விசாரணை அறிக்கையை மே 28ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.