Cooking Tips: ராகி + பால் + நட்ஸ் கஞ்சி.. healthy food.. Tips by G Yasmin!
- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்
வணக்கம் நண்பர்களே .. இன்னிக்கு சூப்பரான ஒரு கஞ்சி பத்திப் பார்க்கப் போறோம்.. அதுதாங்க ராகி பால் நட்ஸ் கஞ்சி
இந்தக் கஞ்சி சத்தான காலை உணவாகவும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடுவதற்கும் ஏற்றது. சாப்பிட்டுப் பார்த்தா பிறகு அடிக்கடி சாப்பிடத் துடிப்பீங்க..
சரி வாங்க எப்படி செய்யலாம் என பார்க்கலாம் .. கிச்சனுக்குள் போகலாம்.
ராகி + பால் + நட்ஸ் கஞ்சி செய்முறை
1. ராகி மாவு – 2 மேசைக்கரண்டி
2.பால் – 1 கப்
3. நட்ஸ் – பாதாம், முந்திரி, திராட்சை
4.தண்ணீர் – 1 கப்
5 .சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை (தேவைக்கேற்ப)
6. ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால் மட்டும் சேர்க்கவும்)
செய்முறை
வாங்க இப்போ ஒரு நபருக்கு தேவையான ராகி கஞ்சி எப்படி செய்யலாம் என பார்ப்போம். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டீஸ்பூன் ராகி மாவுடன் 1 கப் (1 டம்பளர்) தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கரைத்துக்கொள்ள வேண்டும்.
கரைத்த ராகியை கொதிக்க வைக்கவேண்டும் மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும். சுமார் 5–8 நிமிடங்கள் அல்லது 10 நிமிடங்கள் நன்றாக வேகவைக்கவும். இப்போது சற்று இறுகி வரும். ராகி வெந்ததும் சூடாக்கி வைத்துள்ள பாலைச் சேர்த்துக் கிளறி மேலும் 5 நிமிடங்கள் சூடாக்கவும். பால் சேர்த்தபின் அருந்துவதற்கு ஏற்ப தளர்வாக இருக்கும்.
நறுக்கிய அல்லது அரைத்த நட்ஸ், (அரைத்து சேர்த்தால் குழந்தைகள் கீழே போட முடியாது இல்லையய எப்படி அம்மாக்களோட ஐடியா!) ஏலக்காய்த்தூள், தேவையான அளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். சிறிது சிறிதாக நறுக்கியது எனில் சிறிது நெய்விட்டு வறுத்து சேர்த்துக்கொள்ளவும்.
சுவையான ராகி +பால்+நட்ஸ் கஞ்சி ரெடி . காலை உணவாக அல்லது மாலைச் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். இந்தக் கஞ்சியின் நன்மைகள் நிறைய உள்ளன.
ராகி: கால்சியம் மற்றும் நார்ச்சத்து வழங்குகிறது.
பால்: புரதம் மற்றும் கால்சியம் வழங்குகிறது.
நட்ஸ்: நல்ல கொழுப்புகள், புரதம் மற்றும் சில தாதுக்களை வழங்குகின்றன.
வயிறு நிறைந்த உணர்வைத் தர இந்த ராகி பால் கஞ்சி உதவும். சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க.