டெல்லியில் ஷாக்கிங்.. பார்க்கிங்கில் தகராறு.. நடிகை ஹூமா குரேஷியின் உறவினருக்கு நேர்ந்த விபரீதம்
டெல்லி: வீட்டு முன்பு வாகனத்தை நிறுத்தியதை தட்டிக் கேட்ட நடிகை ஹூமா குரேஷியின் உறவினரை, 2 பேர் சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம் நாடு முழுக்க பார்க்கிங் தொடர்பாக நடந்து வரும் மோதல்களின் நிதர்சனமாக அமைந்திருந்தது. பலரும் சந்திக்கும் பிரச்சினைதான் இது. ஆனால் இது பல நேரங்களில் விபரீதத்தில் போய் முடிந்து விடுகிறது.
சென்னையில் இப்படித்தான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக 2 பேருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு கையில் அரிவாளை ஏந்தி மோதிக் கொண்டதைப் பார்த்து மக்கள் அதிர்ந்தனர். இந்த நிலையில் டெல்லியில் ஒரு கொலையில் போய் இந்த மோதல் முடிந்துள்ளது. உயிரைப் பறி கொடுத்தவர் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் வசித்து வந்தவர் ஆசிப் குரேஷி. இவர் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் ஆவார். இவரது வீட்டுக்கு முன்பு நேற்று இரவு ஒருவர் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். வாசலை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்தியதால் கோபமடைந்த ஆசிப் குரேஷி, வாகனத்தை சற்று தள்ளி நிறுத்துமாறு கூறியுள்ளார். அதைக் கேட்காத அந்த நபர், ஆசிப் குரேஷியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்தோடு நில்லாமல், இரு வர்றேன் என்று கூறி விட்டுப் போயுள்ளார்.
சற்று நேரம் கழித்து தனது சகோதரரை அழைத்துக் கொண்டு வந்த அந்த நபர் ஆசிப் குரேஷியை வீட்டுக்குள் புகுந்து வெளியே இழுத்து வந்துள்ளார். பின்னர் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக ஆசிப் குரேஷியை தாக்கியுள்ளனர். கூரிய ஆயுதங்களைக் கொண்டும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார் ஆசிப் குரேஷி. அதைத் தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்க முயன்றுள்ளனர். ஆனால் இரு சகோதர்களும் சேர்ந்து வெறித்தனமாக ஆசிப் குரேஷியைத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றச் செயலில் ஈடுபட்ட உஜ்வல் மற்றும் கௌதம் என்ற இருவரைக் கைது செய்துள்ளனர். இருவருக்கும் 18, 19 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.