தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

Su.tha Arivalagan
Sep 08, 2026,12:20 PM IST

சென்னை : விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) பங்கேற்காது என்பதை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.


கே.பாலகிருஷ்ணன் பேட்டி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இது தொடர்பாகப் பேசுகையில், "நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை" என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "தவெக அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அந்த கூட்டணி கூட்டத்துக்கும் நாங்கள் போகப்போவதில்லை. இது தொடர்பாக ஏற்கனவே நாங்கள் தெளிவான முடிவை எடுத்துச் சொல்லிவிட்டோம்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


பெ.சண்முகம் விளக்கம்:




அதேபோல், சிபிஐ(எம்) மாநிலக் குழு சார்பில் நிர்வாகி பெ.சண்முகம் வெளியிட்ட தகவலில், தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளார். "புதிய கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் நாங்கள் பங்கெடுக்க மாட்டோம்" எனக் கூறிய அவர், வெளியிலிருந்து தவெக அரசுக்கு ஆதரவு தொடரும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.


தவெக அரசிற்கு போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால், தவெகஆட்சி அமைப்பதற்கு இடதுசாரி கட்சிகள் தங்களின் ஆதரவை அளிப்பதாக அறிவித்தன. அதே சமயம், அமைச்சரவையில் தங்களுக்கு இடம் தேவையில்லை என கூறி விட்டனர். இடதுசாரிகள் தயவில் தவெக அரசு நடந்து வரும் நிலையில், பல்வேறு பிரச்சனைகளுக்காக தவெக அரசுக்கு இடதுசாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஆதரவை வாபஸ் வாங்க போவதாகவும் மறைமுகமாக மிரட்டல் விடுத்து வந்தன.


இதனால் இடதுசாரிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்ற குழப்பமான நிலை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று இடதுசாரிகள் தங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர்.