தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி
Jul 15, 2026,02:02 PM IST
சென்னை: தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இன்று முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கிய நகர்வாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சென்னையில் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தேனி மாவட்டம் மேகமலை பகுதி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் தற்போதைய குதிரை பேர அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் மிக முக்கிய கோரிக்கையாக, இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாகவும், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகவும் விளங்கும் மேகமலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் இடப்பெயர்வு அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேகமலை கிராமத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களையும், தோட்டத் தொழிலாளர்களையும் அங்கிருந்து எந்தக் காரணம் கொண்டும் அப்புறப்படுத்தக் கூடாது என்று சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் முதல்வர் விஜயிடம் வலியுறுத்தினார். எளிய மக்களின் வாழ்விட உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சருடனான சந்திப்புக்குத் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம், தற்போதைய தேசிய மற்றும் மாநில அரசியல் சூழல் குறித்தும், பாஜாகவின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் மிகக் கடுமையான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், "குதிரை பேர விவகாரத்தில் மக்களுக்குக் கோபம் வரவேண்டும். பிற கட்சிகளை உடைத்து, அதன் மூலம் பாஜக தங்களது பலத்தை அதிகரித்துக் கொள்கிறது" என்று குற்றம் சாட்டினார். மேலும், தற்போதைய அரசியல் கட்சித் தாவல்கள் குறித்துப் பேசுகையில், "இங்கே, இவர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத்தான் கட்சி மாறுகின்றனர். எனவே, அதையும் இதையும் ஒன்றாகச் சம்மந்தப்படுத்திக் குழப்பிக் கொள்ளக் கூடாது" என்றும் தெளிவுபடுத்தினார்.
அமைச்சரவையில் இடமா?
தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சரவையில் சிபிஎம் கட்டாயம் பங்கேற்காது; உறுதியாக இருக்கிறோம்; அமைச்சரவையில் இடம்பெறுவோம் என வீரபாண்டியன் எதன் அடிப்படையில் கூறினார் என கேட்பேன் என தெரிவித்துள்ளார். அதனால் வெளியில் இருந்து தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற நிலைப்பாட்டில் சிபிஎம் தற்போதும் தொடர்ந்து உறுதியாக உள்ளது தெளிவாகி உள்ளது.