கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா விளக்கம் கொடுத்துள்ளார். கண்ணாடி பாலம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை மேம்படுத்தும் வகையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது. இந்த கண்ணாடி இழை பாலம் விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 37 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதனை கடந்த டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதனையடுத்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலத்தையும் கண்டு ரசித்து வந்தனர். இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்தநிலையில், கண்ணாடி இழை பாலத்தில் திடீர் என விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் விழுந்த இடத்திற்கு அருகே நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும் வருகின்றனர். இதனால், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அச்சம் அடந்துள்ளனர். அத்துடன் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.
ஆட்சித் தலைவர் விளக்கம்
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் கணணாடி இழைப்பாலம் மிகவும் பலமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. தொடர்ந்து கண்ணாடி இழைப் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆகஸ்ட் 16் தேதி செயின்ட் கோபைன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது ஒரு சுத்தியல் விழுந்ததில் சிறிய அளவில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. அது மெல்லிய கீறல்தான். 2 நாட்களில் அங்கு புதிய கண்ணாடி பதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.