பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!
கடலூர்: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரயில்வே சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த 3 குழந்தைகள் பலியாகியுள்ளனர். ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு வேன் உருக்குலைந்தது. மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே கேட்டை மூடாமல் கேட் கீப்பர் தூக்கியது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பிறகும் கேட் கீப்பர் அங்கு வரவில்லை. தற்போது போலீசார் கேட் கீப்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வேனில் பயணித்த 3 மாணவர்கள் பலியாயினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காவும் தம்பியும் உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இவ்விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000மும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.