உலகை திரும்பிப் பார்க்க வைத்த குராசோ.. யாரு ராசா நீ.. நமக்கே பார்க்கணும் போல இருக்கே!

Su.tha Arivalagan
Nov 21, 2025,04:19 PM IST

- க. சுமதி. 


சென்னை: உலக கால்பந்து ரசிகர்களை மொத்தமாக தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது குரோசோ. அப்படீன்னா என்ன என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.


குராசோ, தெற்கு கரீபியன் கடலில் உள்ள ஒரு தீவு நாடு. இது நெதர்லாந்து நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு சுயாட்சியான தீவ நாடு. 444 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் 1.5 லட்சம் மக்கள்  தொகையும்  கொண்ட மிகச் சிறிய நாடு.  


நிலப்பரப்பில் சிறிய நாடாக இருந்தாலும் பொருளாதாரத்தில் மேலோங்கிய நாடாக உள்ளது . வண்ணமயமான டச்சு கட்டடக்கலை மற்றும் அழகிய கரீபியன் கடற்கரை மற்றும் பவளப்பாறைகள் ஆகியவை குராசோ நாட்டின் சிறப்புகளாகும். 


இவற்றுடன் மேலும் சிறப்பு சேர்க்க தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து  தொடரின் தகுதி சுற்றில் இடம்பெற்று, 

உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.  வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளை உள்ளடக்கிய பிராந்தியத்தில் குரோசோ வருகிறது. அந்தப் பிரிவில் தற்போது தகுதிச் சுற்றில் வென்று உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் தகுதியை அடைந்துள்ளது.




அமெரிக்கா மெக்சிகோ கனடா நாடுகளில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் உலக கோப்பை கால்பந்து  தொடரில்  48 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று பல இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட தகுதி சுற்றுப் போட்டி ஒன்றில், குரோசோ- ஜமைக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டி சமனில் முடிவடைந்ததால் புள்ளிகள் அடிப்படையில் குரோசோ உலகக் கோப்பைத தொடருக்கு முன்னேறியது.


இதன்மூலம் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடரில் பங்கேற்கும் மிகச் சிறிய நாடு என்ற புதிய சாதனையை படைத்துள்ளது குரோசோ. இதுவரை  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கு பெற்ற மிகச் சிறிய நாடு என்ற சாதனையை ஐஸ்லாந்து வைத்திருந்தது. அதை தற்போது குரோசோ முறியடித்துள்ளது.


மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். அதற்கேற்ப, நாடு சின்னதாக இருந்தாலும் லட்சியம் பெரிதாக இருப்பதால் சாதனையை நோக்கி நடை போட்டு வருகிறது குரோசோ.


(க.சுமதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)