உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
டில்லி : தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டித்வா புயல் உருவானது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவிய நிலையில் வலுப்பெற்று டித்வா புயலாக உருவாகி உள்ளது. சென்னைக்கு தெற்கில் தென் கிழக்கே சுமார் 700 கி.மீ.தொலைவில் டித்வா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் சின்னமானது அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்தது. புயலாக உருவானதை தொடர்ந்து ஏமன் நாடு பரிந்துரைத்த 'டிட்வா’(DITWAH) என பெயர் சூட்டியது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு மிக கனமழை அபாயத்தால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29 ஆம் தேதிக்கு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் எச்சரிக்கை எண் 1 ஐ உயர்த்தியுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.