இலங்கை அருகே.. மலைகளுக்கு இடையே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் டித்வா புயல்..!

Su.tha Arivalagan
Nov 28, 2025,10:45 AM IST

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயலானது, தற்போது இலங்கையின் ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு இடையே சிக்கி சற்று பலவீனமாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நிலப் பரப்பிலிருந்து அது மீண்டும் கடலுக்கு வரும்போது மறுபடியும் அது பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயலானது தற்போது இலங்கை கடல் பரப்பில் உள்ளது. இந்தப் புயலின் லேட்டஸ்ட் நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், டித்வா புயலானது, தற்போது இலங்கையின் ஓங்கி உயர்ந்த மலைச் சிகரங்களைத் தொட்டுக் கொண்டுள்ளது. இதன் காரணமாத அது பலவீனமடைந்துள்ளது. மீண்டும் அது கடற்பரப்புக்கு வரும்போது மறுபடியும் பலமாகக் கூடும். 




புயல் நகரத் தொடங்கியிருப்பதால் இலங்கையில் பெய்து வரும் கன மழை இன்றுடன் முடிவுக்கு வரும். அங்கு பெரும் மழைக்கு ஏற்கனவே 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  பெரும் நிலச்சரிவுகளையும், வெள்ளப் பெருக்கையும் இலங்கை கண்டுள்ளது.


அடுத்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம் கடலோரப் பகுதிகள், நாகப்பட்டனம், தஞ்சாவூர், புதுக்கோட்டையின் கடலோரப் பகுதிகள்,  திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. யாழ்ப்பாணம் அருகே வடக்குப் பகுதியில் புயல் நிலை கொண்டிருப்பதால் இந்தப் பகுதிகளுக்கு மழை கிடைக்கும்.


இப்போதைக்கு மிக கன மழை, அதி கன மழைக்கான வாய்ப்புகள் நமக்கு எங்குமே இல்லை.


சென்னை நிலவரம்


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 29ம் தேதி நள்ளிரவுக்கு மேல் தொடங்கி 30ம் தேதி வரைதான் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேசமயம், இந்தப் புயலால் சென்னைக்கு அதி கன மழைக்கான வாய்ப்பும் இல்லை. கன மழை இருக்கும். அதேசமயம், மிக கன மழைக்கும் வாய்ப்புண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.