ஆடி அசைந்து வரும் டித்வா புயல்.. சென்னையில் எப்போது மழை தொடங்கும்.. யாருக்கு ரெட்?
வே. தங்கப்பிரியா
சென்னை: இலங்கை கடல் பகுதியில் நிலவி வரும் டித்வா புயல் மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. வடதமிழகம் நோக்கி மணிக்கு 4 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்தப் புயலின் தாக்கம் காரணமாக தென் தமிழகத்தில் இன்று பலத்த தரைக்காற்று வீசும் என்றும் நாளை மாலை முதல் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு இலங்கை -இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் டித்வா புயலாக வலுப்பெற்றது. இந்த நிலையில் கடந்த 6 மணி நேரத்தில் 7 கி.மீ வேகத்தில் இந்தப் புயலானது தென்கிழக்கில் 440 கி.மீ தொலைவிலும் , சென்னையில் இருந்து 540கிமீ தொலைவில் நகர்ந்து வந்துள்ளது.
தற்போது புயலின் வேகம் மணிக்கு 4 கிலோமீட்டர் என்ற அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பி.அமுதா செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டித்வா புயலாக வலுப்பெற்று வட தமிழகம் நோக்கி நகர்ந்து வரகிறது.
டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று இலங்கையின் வாழைசேனைக்கும் பொலனறுவவுக்கும் இடையே புயல் மையமாக கொண்டுள்ளது. 30 ம் தேதி வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்று தெரிவித்தார்.
(வே.தங்கப்பிரியா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)