மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Meenakshi
Oct 28, 2025,05:18 PM IST

விசாகப்பட்டினம்: மோன்தா புயல் தீவிரம் காரணமாக இன்று ஆந்திராவில் உள்ள 19 மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் உருவான மோன்தா தீவிர புயலானது. வடக்கு - வடமேற்காக ஆந்திர கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது. மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அவ்வப்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.




வங்கக் கடலில்  உருவாகி ஆந்திர கடற்கரையை நோக்கி மோன்தா புயல் தீவிரமடைந்துள்ளதால், ஆந்திரப் பிரதேசத்தின் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆந்திராவில் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.


இந்த புயல் ஆந்திரா மட்டுமின்றி, ஆந்திராவின் அண்டை மாநிலமான ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களிலும் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மாநில அரசு திங்கள்கிழமை ஆபத்தான பகுதிகளில் இருந்து 3,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளது. புயல் காரணமாக புவனேஸ்வர் மற்றும் மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.


மோன்தா புயலின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன முதல் மிககன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.